தமிழ்நாடு அரசின் தனிப்பெரும் கருணை நாள் வெளிப்படுத்தும் சமூக நீதி
முனைவர் சு. சுவாமிநாதன்
இணைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை
திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, இராசிபுரம்
முன்னுரை
திருவருட்பிரகாச வள்ளலார் சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், நூலாசிரியர், சித்தமருத்துவர், மொழிஆய்வாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகத்திறமை கொண்டவர் வள்ளலார் வைதீக மதத்தில் இருந்த மூடப்பழக்கங்கள் பலவற்றை எதிர்த்தவர் உருவ வழிபாட்டை எதிர்த்தவர். ஜோதி வழிபாடு முறையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அறியாமை இருளில் ஆட்பட்ட மக்களை தனது அறிவு ஒளியால் ஞானம் வழங்கிய ஞான வள்ளல் சாதி, சமயம், இனம் என்று பாகுபாடுகளைக் கடந்து சகோதரத்துவத்தை பரப்பியவர் இறைவன் எல்லாமுமாய் நிறைந்திருப்பவன் என்று கூறியவர் இவரின் சன்மார்க்க நெறி வைணவ மதத்தின் மூலமும் சைவ மதத்தின் நெறியை இணைக்கக்கூடிய இணைப்பு பாலமாக விளங்கியது.
‘இறைவன் ஒருவரே. அவர் அருள் பெருஞ்சோதி; அவரே தனிப் பெரும் கருணை கொண்டவர்’ என்றார். வெறும் ஆன்மிகப் பணிகள்; சொற்பொழிவுகள்; எழுத்துப் பணிகள் என்று நின்றுவிடாமல் சமூகப் பணியிலும் தன்னை கரைத்துக் கொண்டவர் வள்ளலார் எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
தனது ஒன்பதாவது வயதிலேயே அறிஞர்கள் நிறைந்த அவையில் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகச்சிறந்த ஆன்மீக உரையாற்றினார் வள்ளலார். அதன்பின்னர் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டி வழிபட்டு பாடல்களை பாடினார். இவரது பாடல்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு, உருவ வழிபாடு எதிர்ப்பு, வேத ஆகம எதிர்ப்பு, பெண் விடுதலை, உயிர் நேயம் போன்ற கருத்துகள் பொதிந்து இருந்தது. மக்களிடம் தானமாக பொருட்களை வாங்கி ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்றுவேளையும் உணவு வழங்க தொடங்கினார், அந்த அன்னதான பணி இப்போதுவரையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”
என்று உயிர்களின் நேயம் பேசிய வள்ளலாரின் கொள்கைகள்…
- கடவுள்ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- எந்த உயிரையும்கொல்லக்கூடாது, புலால் உண்ணக்கூடாது.
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே.அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு பாராது உணவளித்தல் வேண்டும்.
- சாதி, மத வேறுபாடுகள் கூடாது, மத வெறி கூடாது.
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய கருத்துகள் அனைத்தும் முற்போக்கானதாக இருந்ததால் அவர் அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். வள்ளலார் எழுதிய திருவருட்பா பாடல்கள் சைவ சமயத்துக்கு எதிராக இருப்பதாகக்கூறி பல்வேறு விமர்சன நூல்கள் எழுதப்பட்டன, வழக்குகள் கூட நடந்தது. தமிழ் மண்ணில் சித்தர்களுக்கு பிறகு 19 ஆம் நூற்றாண்டிலேயே பரந்துபட்ட சமூக நீதி, சமத்துவ, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை, சாதியொழிப்பு கருத்துகளை முதன் முதலில் பேசியவர் வள்ளலார்தான்.
திருவருட்பா
திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர்.
சமூகநீதி கண்ட இராமலிங்க அடிகள்
இராமலிங்க அடிகளார் ஒரு சமயவாதி என நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டிலே தமிழகத்தில் தோன்றித் தில்லை நடராசர் பக்தராகி உணர்வும் உருக்கமும் பெற்று அருட்பாக்கள் ஆயிரமாயிரம் பாடிய அருளாளர் அவர். தேவார மூவர், திருவாசக மணிவாசகர், முற்றுந்துறந்த பட்டினத்தடிகள், எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்த தாயுமானவர் ஆகியோர் வழியிலே இறுதியில் தோன்றிய உறுதியாளர் அவர். ‘நாம் எல்லோரும் சமயவாதிகள் என்பது போல அவரும் ஒரு சமயவாதி’ என்று எளிதாகக் கூற முடியாது.
அவர் வாழையடி வாழை என வந்த திருக்கூட்டத்தில் ஒருவர்; நாம் வாழையடி வாழை என வந்த வெறுங் கூட்டத்தில் ஒரு கூட்டம். நாம் எல்லாம் சமயிகள்; அவர் சமயவாதி; நாம் சமய வழிபாட்டினர்; அவர் சமய வழிகாட்டுநர்; நாம் சமயத் தொண்டர்; அவர் சமயத் தலைவர்; அவருக்கும் மற்றியோருக்கும் இடையே அமைந்த வேறுபாடு என்ன வேறுபாடு? இராமலிங்க அடிகளார் கொண்ட தெய்வ பக்தி ஆழமானது; நம்பிக்கை முழுமையானது; ஈடுபாடு எல்லையற்றது. அறவு ஐயம் திரிபற்றது. ஆகவேதான் அவர் ஒரு தெய்வீகச் சான்றோராகத் திகழ முடிந்தது.
சீர்திருத்த கருத்துக்கள்
இச்சமயங்களும் மதங்களும் சாத்திரங்களும் கண்டு கூறியவை கடவுளும் தெய்வங்களும் இவையெல்லாம் வீண் என்றும் வேண்டாதவை என்றும் இராமலிங்க அடிகள் கண்டிக்கிறார். இவை அனைத்தையும் பேசியும் பயன்படுத்தியும் வரும் மதவாதிகளும் அடிகளாருக்கு குற்றவாளிகளாகவே தோற்றமளிக்கின்றனர். ஆதலால் சமயமதங்கள், வேதாகமசாத்திரங்கள், அவற்றின் பலப்பல தெய்வங்கள் அவற்றின் காவலர் கூட்டங்கள் இவை அனைத்தையும் அடிகளார் இங்குச் சாடுகின்றார்.
அடிகளார் சாதியைக் கண்டித்தலோடு அமையாது அவற்றுடன் பிற ஆசிரமங்களையும் ஆசாரங்களையும் கண்டித்தலை இங்குக் காண்கின்றோம். ஆசிரமங்களாவன பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகியவை. வருணாசிரமத்தோடு சேர்ந்து எண்ணற்ற சாரங்கள் இயங்கி வருகின்றன. அவற்றையும் அடிகளார் சாடுகின்றார். சமயங்கள், அவற்றைத் தாங்கி அன்று நிலவிய நூல்கள், அவை ஆதரித்த அன்று விளங்கிய சமூக அமைப்பு ஆகிய இவை அனைத்தையும் அடிகளார் வெறுத்தார். அவை அனைத்தும் பொய் என்பது மட்டும் அல்ல; தீயவையும் ஆகும் என்று அவர் கருதினார். இந்த உணர்வோடு தெய்வத்தின் மீது அவர் கொண்ட முழுமையான பக்தி இணைந்தது. ஆதலால்தான் அடிகளார் வெறுஞ் சமயவாதியாக மட்டும் அல்லாது சமய சீர்திருத்தவாதியாகவும் உயர்ந்தார்.
பழமையை மாற்ற எண்ணிய போது புதுமை ஒன்றையும் அவ்விடத்தில் அவர் படைத்து வழங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அவர் கண்ட புதுமை புதுமைச் சமயம் சமரச சன்மார்க்கம் என்பது. இவ்வாறாக அன்றைய சமூகச் சிக்கல்களை எடுத்துக் காட்டி அவற்றுக்குத் தம்போக்கிலே இராமலிங்க அடிகளார் தீர்வும் கண்டார்.
ஜீவகாருண்யம்
இராமலிங்க வள்ளலார் ஜீவகாருண்யத்தைப் பற்றிய ஒரு விரிவான நூலை பல பாகங்களாகப் பிரித்து எழுத வேண்டுமென்று திட்டமிட்டிருந்திருக்கிறார். அதில் முதல் மூன்று பிரிவுகளே இதுவரை வெளிவந்துள்ளன. மற்ற பிரிவுகள் எழுதப் பெற்றனவா இல்லையா? என்பது தெரியவில்லை. ஒழுக்கத்தை, தனிமனிதனின் நித்திய ஒழுக்கம் என்றும், கருணை ஒழுக்கம் என்றும், இந்திரிய ஒழுக்கம் என்றும், அவ்வப்போது உபதேசித்தருளிய வள்ளலார் ஜீவகாருண்யத்தைப் பற்றி பல கோணங்களிலிருந்தும் சிந்தித்து நிரல் பட விவரித்துள்ளார்.
பசி, கொலை, பிணி முதலிய எந்தத் தடைகளுக்காக ஜீவகாருண்யம் தோன்றியதோ அந்தத்தடையை நிவர்த்திப்பதே ஜீவகாருண்யம் என்பது வள்ளலாரின் விளக்கம். இருப்பினும் பசி நீக்குதலை அவர் அடிக்கடி வற்புறுத்தி இருக்கிறார். பசி நீக்குவதற்காக அவர் தருமசாலை ஒன்றையும் நிறுவினார். என்பது பொய்யாமொழி. ஒருவன் பசியைத் தீர்த்தால் அது தனக்கே வந்து உதவும். எனவே தன்னலம் கருதியாவது பிறர் பசியைத்தீர்க்க வேண்டும் என்று வள்ளலார் வற்புறுத்தினார்.
தனிப்பெருங்கருணை நாள்
வள்ளலாரின் பிறந்தநாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்.
அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அருட்பெருஞ்ஜோதியின் “தனிப்பெருங்கருணை” காரணத்தால் இவ்வுலகிற்கு வள்ளலார் வருவிக்கவுற்றார். எனவே வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளை “தனிப்பெருங்கருணை நாள்” என தமிழக அரசு அறிவித்ததற்கும் காரணம் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
முடிவுரை
இராசாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தைத் தொடங்கினார். தயானந்தர் ஆரிய சமாஜத்தை நிறுவினார். இராமகிருஷ்ண பரம அம்சரோ, விவேகானந்தர் வாயிலாக, ஸ்ரீ இராமகிருஷ்ணர் சங்கம் நிறுவினார். இராசாராம்மோகன் ராய் சமூகச் சீர்த்திருத்தப் பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தினார். உருவ வழிபாட்டை எதிர்த்தார். ஆணுக்குப் பெண் சமம் என்ற வேதகால நீதியைத் திரும்பவும் நிலைநாட்ட முனைந்தவர். வேத, ஆகம், சாத்திரங்களிலுள்ள முற்போக்கான-விஞ்ஞான சகாப்தத்துக்குப் பொருந்தத்தக்க கருத்துக்களை ஏற்றுக் கொண்டு காலத்துக்கொவ்வாத வித்தைகளின் மீது அறிவுப் போர் தொடுத்தார்.
“பாரதமக்கள் ஆங்கிலமொழியினைப் பயில வேண்டும். கல்வி அந்த மொழியிலேயே கற்கப்பட வேண்டும்” என்ற லார்டு மெக்காலேயின் தேசிய விரோதக் கல்வி முறைக்கு மனநிறைவோடு ஆதரவு தந்தார். ஆங்கில மொழியறிவே மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க முடியும் என்று இராசாராம் மோகன்ராய் நம்பினார். மூட நம்பிக்கையாம் இருளைப் போக்கும் பகுத்தறிவுக் கதிரவனாக பறங்கி மொழியை ஏற்பது, மற்றொரு புதிய மூட நம்பிக்கையாகும். தயானந்தர், இராமகிருஷ்ணர், இராமலிங்கர் ஆகிய மூவரும் ஆங்கில மொழி அறியாதோரே. இருந்தும் வேதாகம சாத்திரங்களின் துணை கொண்டு வளர்ந்த மூடநம்பிக்கைகளை முழுமூச்சோடு எதிர்த்துப் போரிட்டு உள்ளனர். இராமலிங்க வள்ளலார், மற்ற மூவரையும் விட மிக மிகத் தீவிரவாதியாவார். எப்பொழுது தெரியுமா? சுயசாதி சத்தியற்றது. சுய இனம் உணர்ச்சியற்றது என்று நாடு இருந்த நிலையில். நபிகள் நாயகம் ஆண்டவர் தூதர் என்றுக் கூறிக்கொண்டது. காந்தியடிகளாரும் கடவுளால் அனுப்பப் பட்ட தொண்டராகவே கருதியது போன்றே இராமலிங்கரும் இந்த உண்மையை உணர்த்துகின்றார்.
வள்ளலாரின் பிறந்தநாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தனிப்பெருங்கருணைநாள் உலகளாவிய சமூக நீதிக்கு ஓர் சிறந்த உரைகல் ஆகும்.
துணைநூல் பட்டியல்
முதல்நிலை சான்று
செய்தி வெளியீடு எண்:838 நாள் 05.10.2021 வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 9
இரண்டாம் நிலை சான்று
அடியன்மணிவாசகன். இரக்கப்பேரொளி இராமலிங்கர் அருளிய திருவருட்பா: எளியவுரை., 2014
அருண். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வாழ்வும் தொண்டும். ஸ்ரீ விக்னேஷ் பதிப்பகம், 2011.
கலியாணசுந்தரனார், திருவாரூர் விருதாச்சலம். வள்ளலார். மணிவாசகர் பதிப்பகம், 1999.
கலியாணசுந்தரனார், திருவாரூர் விருதாச்சலம். வள்ளலார். மணிவாசகர் பதிப்பகம், 2001.
மணி, குப்பு. சு. வள்ளலார் நெறி.அருந்ததி நிலையம், 2004.
வன்மீகநாதன், கோ., இராமலிங்கம், பகீரதன் மு. ஜோதி வழியில் வள்ளலார். இராமலிங்கர் பணிமன்றம், 1977.
வள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு.அழகு பதிப்பகம், 2002.
வள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு.அழகு பதிப்பகம், 1999.
காதர் இபுராஹிம்,சமயங்கள் கடந்த வள்ளலார். 2002.
ப்ரியா பாலு. வடிவேலனின் அருள் பெற வள்ளலார். ஆர். ஆர். நிலையம், 2009.
பாரதி, சுத்தானந்த. அருட்சுவர் வள்ளலார். முல்லை நிலையம், 1990.
வாழையடி வாழையென., வள்ளலார் கற்றதும் வள்ளலாரில் பெற்றதும்.சந்தியா பதிப்பகம், 2009.
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்.: சாது அச்சுக்கூடம், 1962.
இரகுநாதன், எஸ். வள்ளலார்: கேள்வி பதில்கள். அநுராகம் பதிப்பகம், 2008.
இராசேந்திரன் & க. சில்லாழி. வள்ளலார் கண்ட பக்தி நெறியும், ஞான வழியும்: வள்ளலார் மாநாடு
குருமூர்த்தி, கே. மகான்களின் கதை. ,பழனியப்பா பிரதர்ஸ், 2008.
சுவாமி சரவணானந்தா. அருட்பெருஞ்சோதி அகவல்: அனுபவ பொருள் உரை விளக்கம் ; மூலம் திருவருட்பிரகாச வள்ளலார்.
பி.வி.அருட்பேரொளி வள்ளலார்., 2005.
திருஅருட்பிரகாச வள்ளலார். திருவருட்பா: உரைநடைப் பகுதி., 1997.
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய அருள்விளக்க மாலை., 2013.
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திரு அருட்பா: ஆறாம் திருமுறை. சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், 1989.
திருவடிப்புகழ்ச்சி: இராமலிங்க சுவமிகளின் சிறந்த பிரார்த்தனை பாராயண நூல் ; திருவருட்பா திருநெறியின் மூன்றாம் திருமுறை., நர்மதா பதிப்பகம், 2005.
முத்துக்குமாரசாமி. வள்ளலார் வழங்கிய உலகப் பொது நெறி. 1997.
விவேகானந்தன், மு. வழிகாட்டும் வள்ளலார். மணியம் பதிப்பகம், 1994.
கோதண்டராமன், பொன். தமிழக வரலாற்றில் வள்ளலார். பூம்பொழில் வெளியீடு, 2004.
ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு. சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், 1971.