சங்க காலங்களில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட தமிழகம், அவர்களைத் தொடர்ந்து களப்பிரர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் மற்றும் பிற்காலப் பாண்டியர்களால் ஆளப்பட்டது. பின்னர், டெல்லி சுல்தான்கள் மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோராலும் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயர்களாலும் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மதராஸ் எனப்பட்ட தற்காலச் சென்னை தமிழகத்தின் தலைநகராகத் திகழ்கின்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தற்காலத் தமிழகம் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் ஒரு பகுதி ஆகியவை ஒட்டு மொத்தமாக மதராஸ் மாகாணம் எனப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இவை மறுசீரமைக்கப்பட்டு தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்தன. ஆனால் மதராஸ் பிரசிடென்ஸி எனும் பெயர் மட்டும் 1969 வரை அப்படியே தொடர்ந்தது. அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலமான 1969-இல் மதராஸ் பிரசிடென்ஸி எனும் பெயர் அதிகாரப்பூர்வமாகத் ‘தமிழகம்’ என மாற்றப்பட்டது.
இந்தியாவில் முதல் நகராட்சியாகவும் உலகின் இரண்டாவது நகராட்சியாகவும் 1688-இல் துவங்கப்பட்ட ‘மதராஸ் நகராட்சி’ தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சியாக (Greater Chennai Metopolitan) தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 1996 ஜூலை 17 அன்று மதராஸ் என்ற பெயர் சென்னை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் அரசுச் சின்னம்
தமிழ்நாட்டின் அரசுச் சின்னத்தின் மையத்தில், பிரபலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் உயர்ந்த கோபுரம் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இதனுடைய அடிப்பீடத்தின் மையத்தில் செந்நிறத்தில் இந்தியச் சின்னமான சாரநாத் சிங்க ஸ்தூபி இடம் பெற்றுள்ளது. இச்சின்னத்தின் மேற்புறத்தில் ‘தமிழ்நாடு அரசு’ என்ற சொற்றொடரும் கீழ்ப்புறத்தில் ‘வாய்மையே வெல்லும்’ என்ற சொற்றொடரும் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் அரசுப் பாடல்
தமிழ்நாட்டினுடைய அரசுப் பாடல் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ ஆகும். தமிழ்நாட்டு அரசின் எல்லா அதிகாரப்பூர்வமான விழாக்களும், பள்ளிகளில் பிரார்த்தனை அணிவகுப்புகளும் இந்தப் பாடலுடன்தான் தொடங்குகின்றன. இப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை ஆவார். இப்பாடல், ‘நீராரும் கடலுடுத்த’ என ஆரம்பமாகிறது.
தமிழ்நாட்டின் அரசு நடனம்
பரதநாட்டியம் என்பது தமிழ்நாட்டின் அரசு நடனமாகும். பரத முனிவரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த நடனம் செவ்வியல் இசையுடன் நிகழ்த்தப்படுவது. தொன்மைமிக்க தமிழ்க் கலாச்சாரத்துடன் பரதநாட்டியம் ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுள்ள இணைப்பைக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் அரசு விலங்கு
நிலகிரி தார் ஆடு (Nilgiri Tragus Hylocrius) தமிழ்நாட்டின் மாநிலங்களிலும் பாவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் தென்பகுதியில் உயரமான இடங்களில் இவ்வகை ஆடுகள் காணப்படுகின்றன. இதன் தமிழ்ப்பெயர் ‘வரையாடு’ என்பதாகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (IUCN) அருகிவரும் இளமாக (Endangered Species) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை
பஞ்சவர்ணப் புறா அல்லது மரகதப் புறா (Chalcophaps கினம் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாகும். இது ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் காணக்கிடைக்கிறது. இப்புறாக்கள் சாதாரணமாக பழங்களையும், விதைகளையும் உணவாக உட்கொள்கின்றன.
தமிழ்நாட்டின் மாநில மரம்
பனைமரம் (Borassas Flabellifer) தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இம்மரம் சங்க காலம் முதலே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இம்மரத்திலிருந்து கருப்பட்டி, பதநீர் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் மாநில மலர்
கார்த்திகை மலர் அல்லது செங்காந்தள் மலர் (Gloriosa Superba) தமிழ்நாட்டின் மாநில மலராகும். இந்தப் பூ தமிழ் ஈழத்தின் தேசிய மலரும் ஆகும். இது ‘கண்வலி மருந்து பூ’ என்றும் பொதுமக்களால் அறியப்படுகிறது.
தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு
சடுகுடு அல்லது கபடி, தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு ஆகும். ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் மாநில விளையாட்டும் கபடியே ஆகும்.
தமிழ்நாட்டின் மாநிலப் பழம்
பலாப்பழம் தமிழ்நாட்டின் மாநிலப் பழமாகும். தமிழ்நாட்டின் புனிதமான மூன்று புகழ்பெற்ற பழங்களுள் இதுவும் ஒன்று. மா, பலா, வாழை – ஆகிய இம்மூன்றும் முக்கனிகள்’ என அறியப்படுகின்றன.
தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சி
‘தமிழ் மறவன்’ வகை வண்ணத்துப்பூச்சியை தமிழகத்தின் பாநில வண்ணத்துப்பூச்சியாக அதிகாரப்பூர்வமாக 2019 ஜூன் 28-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ளது. Cirrochora thais எனும் அறிவியல் பெயருடைய இந்த வகை வண்ணத்துப் பூச்சிகள் (மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழக்கூடியவை.
தமிழக மாவட்டங்கள்
ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. 1872-இல் மெட்ராஸ் மாகாணத்தில் 21 மாவட்டங்களும் 5 மன்னராட்சிப் பகுதிகளும் இருந்தன. 1881-இல் 23 மாவட்டங்களும் 5 மன்னராட்சிப் பகுதிகளும் இருந்தன. 1941-இல் 25 மாவட்டங்களும் 5 மன்னராட்சிப் பகுதிகளும் இருந்தன. சுதந்திரத்திற்கும் பிறகு 1951-இல் மெட்ராஸ் மாநிலத்தில் 26 மாவட்டங்கள் இருந்தன. மார்ச் 1956-இல் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது நடைபெற்ற விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மெட்ராஸ் மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் க.பெ.சங்கரலிங்கனார் ஆவார். செப்டம்பர் 6, 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் (அரசியல் சாசன ஏழாம் திருத்தச் சட்டம்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நவம்பர் 1, 1956 முதல் அமலுக்கு வந்தது. 1956-இல் இந்திய அரசு இயற்றிய மாநில மறு சீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் 14 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் உருவாக்கப்பட்டன. இதன்படி 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்மொழி பேசும் மாநிலமாக “புதிய மெட்ராஸ் மாநிலம் உருவானது. இதனால் 1961-இல் மெட்ராஸ் மாநிலத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகக் குறைந்தது. 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் மெட்ராஸ் மாநிலத்தைத் “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்யும் மசோதா மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதுவே மெட்ராஸ் மாநில (பெயர் மாற்ற) சட்டம், 1968 எனப்பட்டது. இதன்படி அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1971-இல் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆகும். இதுவே 1981-இல் 16 ஆகவும், 1991-இல் 21 ஆகவும், 2001-இல் 30 ஆகவும் உயர்ந்தது. 2008-இல் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. திருப்பூர் மாவட்டம் தமிழகத்தின் 32-ஆவது மாவட்டமாக 25.10.2008 அன்று அறிவிக்கப்பட்டு 2009 முதல் நடைமுறைக்கு வந்தது.
ஐந்து புதிய மாவட்டத்திற்கான அறிவிப்புகள்:
2019 ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில் தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு 2019 ஜனவரியில் வெளியிடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக்குவதற்கான அறிவிப்பு 2019 ஜூலையில் வெளியிடப்பட்டது.
மேற்கண்ட அறிவிப்புகளால் தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களை சேர்த்து எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.
மேலும் வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்கள்
- சென்னை
- கடலூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருச்சிராப்பள்ளி
- திருவாரூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- கோயம்புத்தூர்
- கரூர்
- ஈரோடு
- கிருட்டிணகிரி
- நாமக்கல்
- நீலகிரி
- சேலம்
- திருப்பூர்
- கன்னியாகுமரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- தேனி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- தென்காசி
- விருதுநகர்