வாழ்வியலின் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்து, நுணுகி ஆய்ந்து தம் தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை உலகுக்கு எடுத்துரைத்த தனக்குவமையில்லாத சுய சிந்தனையாளர், தந்தை பெரியார் அவர்கள்.அய்ந்தாம் வகுப்புவரைதான் படித்தவர் என்றாலும், தம் கருத்து வலுவுக்கு வேறு பேரறிவாளர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டாத மேதகு சிந்தனைச் சிகரமாக அவர் விளங்கி வந்தார்.சமயம் சார்ந்த தத்துவ அறிஞர்களாக எல்லோரும் விளங்கிய நிலையில் சமுதாயம் சார்ந்த உண்மையான ஒப்பற்ற சமூகச் சிந்தனையாளர் ஆகத் திகழ்ந்தவர் பெரியார் அவர்கள்.இணையற்ற சமுதாயச் சிந்தனையாளர் என்னும் நிலையில் தந்தை பெரியார் அவர்களின் கல்விச் சிந்தனைகளை ஆய்கிறபோது வியப்புக்குரிய சிறந்த கருத்துகள் வெளியாகின்றன.

கல்வியின் நோக்கு

முழுமையாக ஆய்ந்து, கல்வியின் குறிக்கோள்கள் இவை என பெரியார் அவர்கள் திட்டவட்டமாக வரையறுத்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.”நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.“‘குடிஅரசு‘ : 22.8.1937

மேலும்,

“கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக்கூடாது. அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்” -‘விடுதலை‘ : 4.3.1959

கல்வியின் தேவை

பெரியார் அவர்கள் ஆழமாகச் சிந்தித்து ஆய்வு செய்து ஒரு தனிமனிதனுக்கு எதற்காகக் கல்வி தேவை? ஏன் கல்வி தேவை? என்பதை வெகு சிறப்பாக வெளியிட்டுள்ளார்.”கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதே யாகும்.அல்லது உலகில், நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்”.

அதாவது,

“ஒவ்வொரு காரியத்திற்கும், மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்திலிருந்தோ அல்லது, தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடும் வாழத் தகுதியுடையவர்களாக வேண்டும்.” என்கிறார்.’குடிஅரசு‘ : 27.9.1931

சமூகத்திற்கு கல்வி ஏன் தேவை?

தனி மனிதனுக்கு மட்டுமன்றி மக்கள் கூட்டத்திற்கு -_ மன்பதைக்கு _ அதாவது சமுதாயத்திற்குக் கல்வி ஏன் தேவை? என்கிற கண்ணோட்டத்திலும் பெரியார் ஆழமாகச் சிந்தித்துக் கருத்து வழங்கியுள்ளார்.பெரும் சமூக மாற்றங்களே புதிய சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாகும்.

“ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும், அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்து நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி ஏற்பட வேண்டியதே முக்கியமாகும்.” என்று கூறியுள்ளார்.’குடிஅரசு‘ 26.12.1937

கல்வியின் பயன்

“விஞ்ஞானம், பொது அறிவு, தன்மான உணர்ச்சி, ஒழுக்கம் இவை தரும் கல்வியே முக்கியம்.இவை அளிப்பதாய் இல்லாவிடில் (அக் கல்வியால்) பயனில்லை” என்பது பெரியாரின் உறுதியான கருத்து.’விடுதலை‘ 8.6.1963

நம் நாட்டுக் கல்வியும் – மேலைநாட்டுக் கல்வியும்

“மேலைநாட்டின் கல்வி பெரிதும் பகுத்தறிவையும், விஞ்ஞானத்தையும் ஆராய்ச்சியையும் பொறுத்து உள்ளது என்பதோடு, அவைகளுக்கு அனுகூலமான கல்வியே அங்கு நடைபெறுகிறது. இந்தியாவின் கல்வி, பகுத்தறிவை இலட்சியம் செய்வதில்லை.உலகப் பொது ஆராய்ச்சிக்கும் மதிப்பு வைப்பதில்லை.அவைகளுக்கு ஏற்ற கல்வி இங்கு தொகுக்கப்படவே இல்லை!”குடிஅரசு‘ : 1.11.1946

“மேல் நாட்டில் சரஸ்வதியை வணங்குவதில்லை. எழுத்துகள் நிறைந்த தாளில் மலம் துடைத்த போதிலும் கல்வியில் கருத்துடையவர்களாக 100 க்கு 90 பேர் படித்து அறிவாளிகளாக இருக்கிறார்கள்.இங்கு, காகிதத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டாலும் கல்வியை அலட்சியப் படுத்தி, 100க்கு 90 பேர் தற்குறிகளாக இருக்கிறார்கள்.இது பற்றிச் சிந்திக்க வேண்டாமா?” என்று கேட்கிறார் பெரியார்.’விடுதலை‘ : 17.5.1963

கல்வி முறை

“மக்களுக்கு இன்று ஊட்ட வேண்டியது விஞ்ஞானக் கல்வியேயாகும்.நமக்கு ஒன்றும் இன்று குறைவு இல்லை. அறிவு வளர்ச்சி இல்லாத குறை ஒன்றுதான். 10 ஆண்டுகள் சற்று ஊக்கத்துடன் உழைத்து வேலைபார்த்தால், நாமும் உலக வல்லரசுகளில் ஒருவராக ஆகிவிடுவோம். எனவே,நமக்கு இன்று வேண்டுவது விஞ்ஞான அறிவுதான்!” என்று வலியுறுத்தியுள்ளார் பெரியார்.’விடுதலை‘ : 22.4.1966

தேர்வுமுறை

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கும், அதற்கேற்ப மேல்நிலை வகுப்புகளுக்குச் செல்வதற்கும் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ் பெறுவதற்கும் இன்று அளவுகோலாக இருப்பது தேர்வுமுறை. தேர்வு பற்றி பெரியார் பின்வருமாறு கூறுகிறார்,”பரிட்சைகள் எல்லாம் உருப்போடுகிற சக்தியை வளர்ப்பதாக இருக்கிறதே தவிர, அறிவை வளர்ப்பதாக இல்லை.”விடுதலை‘ : 19.1.1958

இன்றைய பரிட்சைமுறை கிராமபோன் ரிகார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதாகவே உள்ளது.’விடுதலை‘ : 6.10.1964

தேர்வு ஏன் தேவை?

தேர்வின் தேவை பற்றி பெரியார் பின்வருமாறு கூறுகிறார்:“பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற பையன்களுக்குப் பரிட்சை எதற்கு? ஒழுங்காகப் பள்ளிக்கு வருகின்றானா? வகுப்பில் எப்படி நடந்து கொள்கின்றான்? என்பதைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, பரிட்சை எதற்கு?“‘விடுதலை‘ : 8.7.1972

“பள்ளிப் படிப்பில் ஒரு மாணவன் வகுப்பில் இத்தனை நாள் கிரமப்படி ஆஜர் ஆகி, விஷயங்களைச் சரிவரக் கவனித்துக் கொண்டிருந்த காலம் (Term Course) தீர்ந்தால் போதும் என்று மேல் வகுப்புக்கு அனுப்பிட வேண்டும்.பரிட்சை மூலம் மக்களை மேல் வகுப்புக்குச் செல்ல விடாமல் கழிக்கக் கூடாது!”குடிஅரசு‘ : 22.5.1948

கல்விக்கொள்கை

“நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக்குகிறது. பிறகு அடுத்த படியாக உள்ளதுதான் கல்வி” என்று கூறுவதன் மூலம் கல்விக் கொள்கையில் ஒழுக்கமே முதன்மை என்கிறார்.’விடுதலை’ : 1.3.1956

கல்விக் கொள்கையாக, எவை, இருக்கக்கூடாது என்பதையும் பெரியார் சுட்டிக் காட்டுகின்றார். பெரியார் பின்வருமாறு கூறுகிறார்:-_“கடவுள் பக்தி, மத பக்தி, ராச (அரசியல்) பக்தி ஆகிய அறிவைத் தடை செய்யும் அடிமைப் புத்தியைக் கற்பிக்கும்படியான விசயங்களைக் கல்விச் சாலைக்குள் தலை காட்டவே விடக்கூடாது!”விடுதலை‘ : 30.9.1963

வேலைவாய்ப்பு

கல்வித் திட்டம் பற்றி பெரியார் அவர்கள் தெள்ளத் தெளிவாக வரையறை செய்து வெளியிட்டிருக்கிறார். பெரியார் கூறுகிறார்:_”ஒரு அளவுக்கு வரை கல்வி பொதுக் கல்வியாக, எல்லாச் சமுதாய மக்களும் படிக்கும் வயது வந்த 100 க்கு 100 பேரும் படிக்கும் படியாகச் செய்துவிட்டு, உத்தியோகத்திற்கும் தொழிலுக்கும் அவசியமான அளவுக்கு கல்வியை மாத்திரம் ஜாதி வகுப்புப் பிரிவு, மக்கள் எண்ணிக்கைப்படி கொடுத்து வரலாம்.விடுதலை‘ : 13.3.1951

“டாக்டர், எஞ்சினீயர், மற்ற படிப்புகளுக்கு மட்டும் தனியாகப் படிப்பு வசதி செய்து கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு, பல்வேறுபட்ட தொழிற்கல்வி அளிக்க வேண்டும். இதன் மூலம் 100 க்கு 100 மக்களுக்கும் கல்வியும் கிடைக்கும்; வாழ்க்கைத் தொழிலும், வருவாயும் கிடைக்கும்.“‘விடுதலை‘ : 22.9.1968

படித்ததில் பிடித்தது

முனைவர் சு. சுவாமிநாதன்

By swanthan1@gmail.com

Dr. S. Swaminathan is right now working as an Associate Professor in the Department of History at Thiruvalluvar Government Arts College, Rasipuram, Namakkal District. In advance, he has joined the Department of History at Bharathidasan University, Tiruchirappalli, for his postgraduate degree in history. Subsequently, he joined a full-time Ph.D. research program under the supervision and guidance of Professor N. Rajendran, Dean of Arts and Head, Department of History, Bharathidasan University, Tiruchirappalli, in 1999. His research topic is “Science in Colonial Tamil Nadu, A.D. 1900–A.D. 1947”. He has applied for and obtained the Indian Council of Historical Research-New Delhi Junior Research Fellowship, and as such, he has been an I.C.H.R. junior research fellow. He was awarded his Ph.D. thesis in 2007. He has exhibited research acumen and administrative skills during the period of his research. He has published many articles during his period of research. He got his current position from the Tamil Nadu Government Directorate of Collegiate Education, Chennai, through the selection of the Tamil Nadu Teachers Recruitment Board, Chennai, in 2008. He has organized a Tamil Nadu State Council for Higher Education-sponsored two-day state-level seminar on “Social Changes in Tamil Nadu Past and Present” held from April 5 and 6, 2010, and a two-day ICHR-sponsored national seminar on “History of Science and Technology in Tamil Nadu: Colonial Initiatives and Indian Response” held from August 26 and 27, 2010, in the auspicious Department of History, Thiruvalluvar Government Arts College, Rasipuram (637 401).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *